Sunday, 20 November 2016

பணி புரிந்து கொண்டே போட்டி தேர்விற்கு படிப்பவர்களுக்கு:

Standard
பணி புரிந்து கொண்டே போட்டி தேர்விற்கு படிப்பவர்களுக்கு:தனியார் துறையில் வேலை, ஓய்வில்லாத உழைப்பு, சனி- ஞாயிறு அன்று கூட விடுமுறை இல்லை, தினமும் கூடுதல் நேர வேலை, என்னதான் உழைத்தாலும் அதேற்கேற்ற அங்கீகாரம் இல்லை, ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கினால் கூட எப்போது வீட்டுக்கு அனுப்புவார்களோ என்ற கவலை, பணி நிரந்தரம் இன்மையால் மன அமைதியில் குழப்பம், அலுவலக அரசியல்.

இவற்றை எல்லாம் மனதில் வைத்து ஒரு அரசு வேலையை வாங்கிவிட வேண்டும் என்ற கனவுடனும், அதே நேரம் தற்போது பார்த்துக் கொண்டு இருக்கிற வேலையை விட முடியாமலும் பல்வேறு சகோதர/சகோதரிகள் தவித்து வருகின்றனர். அவர்களுக்கானது என்னுடைய இந்தப் பதிவு.

1. முதலில் வேலைபார்த்துக் கொன்டே போட்டி தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால், படிப்பதற்கு போதுமான நேரம் இல்லாமை. வீட்டில் இருந்து முழு நேரம் இத் தேர்வுகளுக்கு படிப்பவர்களுடன் போட்டி போட வேண்டிய நிலைமை. அவர்கள் ஒரு நாளில் படிக்கும் பாடத்தை படிக்க நமக்கு 2 அல்லது 3 நாட்கள் ஆகலாம்.

எனவே, நீங்கள் எந்த எந்த வழிகளில் உங்கள் பொன்னான நேரம் செலவாகிறது என்பதனை கண்டறிந்து குறைக்க வேண்டும். டிவி பார்ப்பது, அடிக்கடி அவசியம் இன்றி வெளியே போவது, பொழுது போக்கில் அதிக நேரம் போன்ற அனாவசிய நேர செலவுகளை குறைத்துக் கொண்டு அந்த நேரங்களில் படிக்கலாம். குறைந்த பட்சம் உங்களால் நாள் ஒன்றிற்கு 4 மணி வரை படிக்க முடியும்.

2. சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை போன்ற விடுமுறை நாட்களை முழுவதுமாக பயன்படுத்தி நீண்ட நேரம் படிக்கலாம்.

3. உங்களுக்கு CL, PL போன்ற விடுமுறை வாய்ப்புகள் இருந்தால் தேவை இல்லாமல் பயன்படுத்த வேண்டாம். தேர்வு நேரங்களில் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு படிக்கலாம்.

4. அலுவலகத்தில் வேலை ஏதும் இன்றி, சும்மா இருப்பதாக நீங்கள் கருதினால், கைக்கு அடக்கமான பேப்பர்களில் (பிட்டு பேப்பர் போன்று) பாடக் குறிப்புகளை உங்களுக்கு புரியுமாறு எழுதி வைத்துக் கொண்டு நினைவு படுத்தலாம். ஆனால் இதனை அலுவலகத்தில் வேறு யாரிடமும் சொல்லக் கூடாது.

5. கூடுமான வரை அடிக்கடி நீண்ட தூர பயணங்களை தவிருங்கள், அவ்வாறு தவிர்க்க இயலாது செல்ல வேண்டி இருப்பின் அந்த பயண நேரங்களை படிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

6. உங்களது சிறு சிறு வேலைகளை பகிர்ந்து கொள்ள நல்ல நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் இருப்பின் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு படிக்கலாம்.

7. கல்யாணம் ஆகாமல் தனியாக அறையில் தங்கி இருப்பவர் என்றால், சமைக்க, துணி துவைக்க என்று நேரம் செலவிடாமல் மாற்று ஏற்படுகளை செய்து விட்டு அந்த நேரத்தில் படிக்கலாம்.

8. எக் காரணத்தைக் கொண்டும் நீங்கள் அரசு வேலைக்கு முயன்று கொண்டு இருப்பதை அலுவலகத்தில் யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். நீங்கள் தற்செயலாக விடுப்பு எடுத்தாலும் படிப்பதற்கு லீவு போட்டு விட்டார் என்று கதையை கிளப்புவார்கள்.

9. உங்கள் மேலாளர், உங்கள் அணி தலைவர் என்று எவரிடமும் நீங்கள் படிப்பதனை சொல்லக் கூடாது. அவர்களுக்கு தெரிந்தால் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக உங்களை வேறு விதமாக நடத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேண்டும் என்றே விடுமுறை தர மறுப்பது, நீண்ட நேரம் அலுவலகத்தில் இருக்க வைப்பது, நீங்கள் வேலையில் ஏதேனும் தவறு செய்து விட்டால் நீங்கள் படிப்பதனை காரணம் காட்டி, உங்கள் கவனம் அலுவலகத்தில் இல்லை இன்று கூறுவது இப்படி உங்களை மறைமுகமாக தாக்கலாம்.

10. ஆயிரம் பொய் என்பது திருமணத்திற்க்காக மட்டும் அல்ல, அரசு வேலைக்காகவும் சொல்லலாம். தேர்வு நேரங்களில் விபத்து, டைபாய்டு காய்ச்சல் என்று எதையாவது கூறி குறைந்தது ஒரு 10 நாட்கள் விடுமுறை எடுத்து விடுங்கள். ஏனென்றால், படிப்பதற்கு - பரீட்சைக்கு என்று நீங்கள் விடுமுறை கேட்டால் எந்த அலுவலகத்திலும் தர மாட்டார்கள். சம்பளம் குறைக்கப்பட்டாலும் பரவாயில்லை. நிம்மதியாக இறுதிக் கட்டத்தில் படிக்கலாம்.

11. ஒரு அலுவலகத்தில் இருந்து நீங்கள் வேறு ஒரு அலுவலகத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை இருப்பின், உடனடியாக புதிய அலுவலகத்தில் சேர்ந்து விடாதீர்கள். அதிகமாக ஒரு 20 முதல் 30 நாட்கள் வரை கழித்து புதிய அலுவலக பணியில் சேருங்கள். இந்த பொன்னான நாட்களை நன்கு படிக்க பயன்படுத்தலாம்.

12. அலுவலக ரீதியாக வெளி ஊர்களுக்குச் செல்ல வேண்டி இருப்பின், அல்லது அங்கு தங்க வேண்டி இருப்பின் பாடப் புத்தகங்களை படிப்பதற்கு உடன் எடுத்துச் செல்லலாம்.

13. TNPSC யைப் பொறுத்த வரை, நீங்கள் வேலைபார்த்துக் கொண்டே உங்களது மொழி பாடத்தில் 90+ வாங்க முடிகிறது என்றால், உங்கள் வருமானத்தை நம்பி உங்கள் குடும்பம் இல்லை என்றால், உங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகள் செய்ய மனிதர்கள் இருப்பின் முக்கியமான தேர்வு அறிவிப்பிற்கு முன்பு குறைந்த பட்சம் ஒரு 6 மாதத்திற்கு முன்பு வேலையை விட்டு விட்டு தன் நம்பிக்கையுடன் படிக்கலாம். வெற்றி நிச்சயம்.

14. உங்களது சம்பளத்தில் கொஞ்சம் சேமித்து வைத்துக் கொண்டு ராஜினாமா செய்து விட்டு படிக்கும் கால கட்டத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

15. வேலையை எந்த தேர்விற்க்காக விட போகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

**அந்த தேர்வின் மொத்த காலி இடங்கள் அதிகமா இருக்க வேண்டும், குறைந்த பட்சம் 2000-3000 காலி இடங்கள்.

**உங்கள் மனதில் நம்மை வெற்றி பெற வைக்க போகும் தேர்வு இது என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.

**அதற்கு முந்தைய தேர்வுகளில் மொழி பாடத்தில் குறைந்த பட்சம் 90+ எடுத்து இருக்க வேண்டும்.

** 6 மாதங்களில் மொழி பகுதி தவிர பிற பாடத்திட்டங்களை எப்படி படிப்பது? என்ற தெளிவு இருக்க வேண்டும்.

** ஏன் என்றால், உங்களால் அடிக்கடி வேலையை விட்டு விட்டு படித்துக் கொண்டு இருக்க முடியாது.

** ஒரே ராஜினாமா, ஒரே வாய்ப்பு, ஒரே தேர்வு, நிச்சய வெற்றி, என்ற ரீதியில் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும்.

** ஜெயித்தால் அரசு வேலை, இல்லை என்றால் உங்கள் அனுபவத்தைக் கொண்டு வேறு தனியார் வேலையைத் தேடிக் கொள்ளலாம்.

நன்றி.

அன்புள்ள,
அஜி,
சென்னை.

1 comment:

  1. Dear sir,I am working person . planning to prepare for vao exam . kindly suggest study material for my preparation.it will helpful if you suggest study material.i don't have enough time to study all and prepare notes.thanks in advance.

    ReplyDelete