Saturday, 1 April 2017

அமிதாப் என்கிற கடன்காரர்

Standard
அமிதாப் என்கிற கடன்காரர்

அமிதாப் பச்சன், தொன்னூறுகளில் துவக்கிய ABCL என்கிற கம்பனி மாறி மாறி நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருந்தது. 2000ல் முழுமையாக கவிழ்ந்தது. அவருக்கு எல்லா நஷ்ட யோசனைகளையும் கொடுத்து கம்பனி போண்டியாகக் காரணமாக இருந்த CEO கம்பனியை விட்டு ஓடிப் போய் விட, பெரும் கடனில் மூழ்கினார். அப்போது அவருக்கு ஒரு பட வாய்ப்பு கூட இல்லை. அவர் வசித்த புகழ் பெற்ற மும்பை பங்களா 'பிரதீக்ஷா' ஜப்தி செய்யப் படும் நிலையில் இருந்தது. அமிதாப் என்கிற மாபெரும் இமேஜ் சரிந்து தெருவுக்கு வரும் அபாயத்தில் இருந்தார்.
அப்போது அவரின் நிதி ஆலோசகர்கள் 'கடன் எல்லாம் ABCLக்கு தானே? அதை விட்டு விலகி விடுங்கள்!' என்று அழுத்தம் தந்திருக்கிறார்கள். அந்த சபலத்தில் கொஞ்சம் மூழ்கினாலும் அவரின் மனசாட்சி பெரிதும் உறுத்த 'என் பெயரை வைத்துத்தானே எல்லாமே நடந்தது,' என்று யோசித்து ஒரு நாள் எல்லாக் கடன்களையும் தானே ஏற்றுக் கொள்வது என்று முடிவெடுத்தார்.
இவ்வளவு கடன்கள் இருக்கும்போது அமிதாப் ஐம்பது வயத்தினைத் தாண்டி 54 ல் இருந்தார்.
தனக்குக் கடன் தந்த எல்லாரையும் சந்தித்து கடனை திருப்பி அளிக்க உறுதி அளித்தார். தயாரிப்பாளர் யஷ் சோப்ரா-வை சந்தித்து 'எந்த ரோல் வேண்டுமானாலும் பண்ண ரெடி,' என்று கையேந்தினார். சோப்ரா அப்போது வந்த ஒரு ஷாருக் படத்தில் வில்லன் மாதிரியான ரோல் கொடுக்க சிரமேற்கொண்டு பண்ணினார். அதுவரை விளம்பரங்களில் நடிக்காமல் இருந்ததை மாற்றி எந்த விளம்பரமானாலும் நடிக்க ரெடி என்று அறிவித்து, வந்த வாய்ப்பை எல்லாம் எடுத்துக் கொண்டு நடித்தார். அப்போது 'கோன் பனேகா க்ரோர்பதி' வாய்ப்பு வர அதையும் ஏற்றுக் கொண்டார். 'அமிதாப் டிவி ஷோவில் நடிப்பதா? என்னே அவமானம்!' என்றெல்லாம் விமர்சனங்கள் வர அதையெல்லாம் சகித்து கொண்டு வந்த வருமானத்தை எல்லாம் கடனை அடைக்க செலுத்தினார்.
அமிதாப்-பின் மாய வசீகரத்தால் க்ரோர்பதி பெரும் ஹிட் ஆகி விட, சினிமா வாய்ப்புகள் திரும்ப வரத் துவங்கின. கூடவே விளம்பர வருமானங்களும் பெருக, எல்லாக் கடனும் அடைய, கடைசியில் தூர்தர்ஷனுக்கு மட்டுமே கொஞ்சம் கடன் மட்டுமே மிச்சமிருந்தது. ஆனால் அவர்களே வந்து 'எங்களுக்கு பணம் வேண்டாம், அதற்கு பதில் எங்களுக்கு விளம்பரங்கள் நடித்துக் கொடுத்து விடுங்கள்,' என்று சொல்லி விட, ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்து அதையும் அடைத்தார்.
இப்போது எல்லாக் கடனும் ஒரு பைசா விடாமல் அடைத்து, தனக்கு 70,80களில் இருந்த பிம்பத்தை விட இன்னும் பெரிய இமேஜை தன் உழைப்பு, நேர்மை, மற்றும் மாய வசீகரம் இவற்றால் திரும்பவும் கட்டமைத்து அதன் மேல் பெருமையாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
கடன்களை எல்லாம் அடைக்கும் பொழுது அவரது வயது 62.
இந்த விஷயத்தில் அமிதாப் உண்மையிலேயே நிஜ ஹீரோதான்.
தோல்வி வரும்போது துவளாமல் இருப்பதே வெற்றிக்கு வழி.

0 comments:

Post a Comment