Saturday, 9 December 2017

மனமிருந்தால் மார்க்கம் உண்டு (சகோரரிகளின் வெற்றிக்கதை)

Standard


அருமை சகோதரிகளே:
ராஜஸ்தான் என்று சொன்னாலே ஆதவனின் வெப்பம் தீயாகக் கொதிக்கும் பாலைவனமும், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மக்களுமே நினைவிற்கு வருவார்.
மனிதர்களின் அன்றாட தேவைகளில் ஒன்றான குடி தண்ணீரைக் கூட பல கிலோ மீட்டர்கள் நடந்து சென்று எடுத்து வர வேண்டிய நிலைதான் இன்றும்.



அத்தகைய பூமியில் மூன்று பெண்குழந்தைகளை வைத்துக் கொண்டு, எந்த வித பொருளாதார பின் புலமும் இல்லாமல், வறுமையான வாழ்க்கை நடத்தி வரும் ஒரு விதவைத் தாயால் அதிக பட்சம் என்ன செய்ய முடியும்?.
தன் பெண்குழந்தைகள் வளரும் வரை, அவர்களுக்கு உணவு கொடுத்து, அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதே மிகவும் கஷ்டம். அவர்கள் வளர்ந்த பின்னர், அவர்களையும் வேலைக்கு அனுப்பி, ஓரளவு பொருளாதார தேவைகளை நிறைவு செய்த பிறகு, நல்ல மாப்பிள்ளைகளாகப் பார்த்து திருமணம் செய்து வைத்து விட்டால் போதுமானது. இன்றைய கால கட்டத்தில், கணவனை இழந்த ஒரு சராசரி பெண்ணுக்கு இதுவே பெரிய சாதனை.
ஆனால், இதே கஷ்டங்களை எல்லாம் அனுபவித்துக் கொண்டு, உயிர் வாழ தேவைப்படும் அன்றாட உணவிற்க்கே தினமும் செத்துப் பிழைத்துக் கொண்டு இருக்கும் ராஜஸ்தான் தாய் ஒருவர் தன் மூன்று பெண் குழந்தைகளையும், நேற்று வெளி வந்த RAS தேர்வில் (Rajasthan Administrative Service) தேர்ச்சி அடைய வைத்து இருக்கிறார். கணவனை இழந்த நிலையில், கையில் பெரிதாக காசும் இன்றி, தனி ஒருத்தியாக அவர் செய்து இருக்கும் இந்த சாதனை மிக மகத்தானது.
இந்த RAS தேர்வு என்பது, ராஜஸ்தான் அரசினால் நடத்தப் படுவது. இதற்க்கு என்று நம்மூர் TNPSC போன்று அங்கு Rajasthan Public Service Commission (RPSC) உள்ளது. ராஜஸ்தான் ஆட்சிப் பணிக்கு என்று, அரசு நிர்வாகங்களில் வருவாய், பராமரிப்பு மற்றும் நிர்வாக அளவில், மாவட்ட ஆட்சியருக்கு அடுத்த நிலையில் வருவார்கள்.
பொதுவாக சொன்னால் நம்ம ஊர் குரூப்-01 போன்றது. இத் தேர்வில் தேர்ச்சி அடைபவர்கள், பின்னாளில் மாவட்ட ஆட்சித் தலைவராக பதவி உயர்வு பெற முடியும்.
பெண் குழந்தை பிறந்து விட்டாலே, செலவு, தேவை இல்லாத ஒன்று , பெண் பிள்ளை வேண்டாம் என்ற எண்ணம் இன்றளவும் தமிழகம் மட்டுமின்றி, இந்திய கிராமங்களில் பலவற்றிலும் பரவி இருக்கும் நிலையில் தன் மூன்று குழந்தைகள் மீதும் நம்பிக்கை வைத்து அவர்களின் கனவிற்க்காக இரவு பகல் பாராது உழைத்து இன்று வெற்றி பெற வைத்து இருக்கும் இந்தத் தாய் தானும் தலை நிமிர்ந்து , தன் பெண் குழந்தைகளையும் பெருமை கொள்ளச் செய்து இருக்கிறார்.
தன் குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்காக இவர் செய்த தொழில் பேக்கரி யில் வேலை மற்றும் தேவையானார்க்கு உணவு சமைத்துக் கொடுத்தல். நிலையான வருமானம் தரும் வேலையில் கூட இல்லை.
நம்பிக்கையுடன் கூடிய கனவு, அதனை நினைவாக்க தேவைப்படும் கடுமையான உழைப்பு, இதுவே இவர்களின் மூலதனம். இத்தகைய மூல தனத்தைக் கொண்டு, கடந்த தேர்வில் மாநில அளவில் முறையே, 32, 64, 128 தரநிலையில் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் இந்த சகோதரிகள்.
கமலா - 32nd Rank
கீதா - 64th Rank
மம்தா - 128th Rank
தங்கள் தாயின் ஆசை மற்றும் உழைப்பையும் , தங்கள் குடும்ப சூநிலையும் மட்டுமே இவர்கள் எந்நாளும் கருத்தில் கொண்டு இருப்பார்கள் எனபது இவர்களின் வெற்றியின் மூலம் தெரிகிறது.
வாழ்வில் வறுமையை அனுபவப் பூர்வமாக உணர்ந்த இவர்கள், அதே போன்று வறுமையில் வாடும் மக்களுக்கான அதிகாரிகளாக இருப்பார்கள் என்று நம்பிக்கை கொள்வோம்.
என்னைக் கேட்டால், இந்த வருட இந்திய அழகி இந்த தாய்தான்.
வாழ்த்துக்கள் சகோதரிகளே.
அன்புள்ள
அஜி
சென்னை.

0 comments:

Post a Comment